Sunday 18 December 2011

நோக்கா வர்மம்

ஆயிரத்து அறநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு தமிழ்நாட்டில் பிறந்த போதிதர்மர் தற்காப்பு கலையையும் நோக்கு வர்ம கலையையும் சீன தேசத்திற்கு சென்று பரப்பினார்.

இதை 7  ஆம் அறிவு படத்தில் காட்டியிருப்பார்கள்.  ஆனால் படத்தின் இறுதியில் , நாம் போதிதர்மனையும் மறந்து விட்டோம் அவரது தற்காப்பு கலையையும் மறந்து விட்டோம் என்ற கூறியிருப்பார் படத்தின் இயக்குனர்.

இந்த இடத்தில் தான் நான் மாற்று கருத்தினை கொண்டுள்ளேன் அதற்கான காரணத்தையும் கூற விழைகிறேன். 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய நோக்கு வர்மத்தினை ஆண்கள் நாங்கள் மட்டும்தான் மறந்து விட்டோம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நான் கூறும் இக்கருத்தினை மறுக்கும் மணமான ஆண்கள் ,  தங்கள் மனைவிமார் கூறும் ஏதுனும் ஒரு விஷயத்திற்கு மறுத்து பாருங்களேன். 



மேற்கூறியவாறு ஏதேனும் நடந்தால் முதலில் உங்கள் மனைவி உங்கள் மீது தொடுப்பது " நோக்கு வர்மம் " . அவர் உங்களை பார்க்கும் பார்வையிலேயே நீங்கள் சம்மதித்து விடுவீர்..

அப்படியும் நீங்கள் மசியவில்லைஎனில் ,  போதிதர்மன் கூட அறிந்திராத அடுத்த ஆயுதம் " நோக்கா வர்மம் ". நீங்கள் ஒத்துக்கொள்ளாத ஒரு விஷயத்தினை ஒத்துக்கொள்ளும் வரை உங்கள் மனைவியின் கண்களுக்கு நீங்கள் காணாமல் போய் விடுவீர் . அதுமட்டுமல்லாது நீங்கள்மட்டும் பேசுவது உங்கள் மனைவியின் காதுகளை எட்டாது. சமையலறைக்கு விடுமுறை கிடைக்காது . சமையலின் போது உப்பு சேர்க்கப்படமாட்டாது , உப்பில் மட்டுமே சமையல் நடைபெறும் , காந்தியின் உப்பு சத்தியாகிரகம் மாதிரியான மனைவிமாரின் உப்பு சத்தியாகிரகம் .  உங்களுக்கு வேறு வழியிருக்காது. அதையும் மீறினால் .. இருக்கவே இருக்கிறது தாய் வீட்டு சீதனப்பாத்திரங்கள்.. 

முடிவில் நீங்கள் வெற்றிகரமாக தோற்றே ஆகவேண்டும்.  இப்போது சொல்லுங்கள் நாம் அனைவருமா போதி தர்மன் கலைகளை மறந்து விட்டோம்.. 


அன்புடன் விவேக்,

While you smile , You are Beautiful.. 
While you Laugh, You are very Beautiful.. 
Atleast be beautiful.

Thursday 15 December 2011

தண்ணியில கண்டம்

முல்லை பெரியாறு அணை -  இன்றிலுருந்து சுமார் 115 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. கல்லணை கட்டப்பட்டது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு.. அது தமிழகத்தினுள் உள்ளதால் நல்ல வேளை அண்டை மாநிலத்தார் வேறு யாரும் அதனில் பிரச்சினை எழுப்பவில்லை.






கேரள மாநிலத்தில் இருந்தாலும் முல்லை பெரியாறு அணை தமிழத்திற்கு சொந்தம். கேரள அரசு இடுக்கி மாவட்டத்தில் பெரியாறு அணையை விட 7  மடங்கு பெரிய அணையை கட்டிவிட்டது. ஆனால் அதில் தண்ணீர் நிரப்புவதற்கான வழி வகைகளை ஆராய்ந்தது. மலையாள மனோரமா பத்திரிக்கை கை குடுத்து உதவியது. குடுத்த காசுக்கு கூக்குரலிட்டது . கேரள அரசு உடனே தண்ணீர் மட்டத்தை குறைக்க உத்தரவிட்டது. அதிலிருந்து பிரச்சினை பிரச்சினை தான்.. 

சிவகாமி கம்ப்யூட்டர் ஒருவேளை சொல்லிடிச்சோ.. தமிழ்நாடு உனக்கு தண்ணியில கண்டம்னு.. கர்நாடகாவோட காவேரி , கேரளாவோட முல்லை பெரியாறு .. வங்கக்கடலோட சுனாமி , இந்திய பெருங்கடலோட ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் அத்துமீறல்.. தமிழ்நாட்டை சுத்தி தண்ணியில கண்டம் தாங்க..


ஸ்ரீலங்கா ராணுவம் அத்து மீறி நமது மீனவர்களை தாக்குகிறார்கள் எனில் பதில் தாக்குதல் நடத்த அவர்கள் நாட்டவர்கள் நமது ஊரில் இல்லை. ஆனால் மலையாளிகளுக்கு என்ன வந்தது . 

ஒரு கதை ஊருக்குள் வலம் வருவது உண்டு.. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி எடுத்து வைத்தபோது அங்கு ஒரு நாயர் டீ வேண்டுமா அல்லது காபி வேண்டுமா என்று கேட்டாராம். வேறு ஒன்றுமில்லை .. மலையாளிகள் பூமியை மட்டுமல்ல எல்லா இடத்திலும் நிறைந்து வழிந்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு புள்ளி விவரப்படி தமிழகத்தில் உள்ள மலையாளிகள் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் அதிகம்.நாம் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.

வந்தாரை வாழவைக்கும் நாடு தமிழ்நாடு. அட வாழையும் வைக்கட்டும் ஓலையும் வைக்கட்டும் , ஆனாலும் வந்தவர்கள் யாராயினும் என்ன செய்தாலும் உபசரித்துக்கொண்டு  மட்டுமே இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. 

மத்திய அரசின் ஒரு அங்கமான கேரள அரசுக்கு இடைத்தேர்தலில் வென்றாகவேண்டிய கட்டாயம் , மத்திய அரசுக்கு தமிழகத்தின் கூடங்குளம் ஒரு தலைவலி. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க வேண்டும் , என்ன செய்யலாம் , எடுத்தது முல்லை பெரியாறு கல்லை. நமக்கு ஏற்கனவே தண்ணி விஷயத்துல பலவீனமின்னு அவங்களுக்குதான் எப்பவோ தெரியுமே. இப்போ என்ன ஆச்சு , கூடங்குளத்தில் போராட்டம் நடக்கிரதாவென்று நேற்று வரைக்கும் தெரியவில்லை .. ஆனால் இன்று தெரிந்தது .. பிரதமர் ரஷ்யா போகிறாராம் , கூடங்குளத்தில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்.  நான் உடனடியாக பிரதமரை பார்த்து இந்த கருப்புக்கொடி போராட்டத்தை பற்றி சொல்ல வேண்டும். அனுமதி கிடைக்குமா .. அட யாருப்பா நீ , 20 நாளா நான் அனுப்பிய கடிதம் கிடைத்தது என்று கூட தகவல் தெரியாமல் காத்துகொண்டிருக்கிறேன் என்கிறார் நம் முதல்வர்.




பாவம் பிரதமர் என்னதான் செய்வார் , எவ்வளவு கேள்விக்குதான் ஒரே பதிலை சொல்லிக்கொண்டு இருப்பார். பார்த்தார் வெளிநாட்டு சுற்று பயணம் கிளம்பி விட்டார்.  நிம்மதி வேண்டாமா? ஆனால் கூடங்குளத்து காரர்கள் தங்கள் போராட்டம் தொடர்வதை சொல்லிக்காட்ட இடம் கொடுத்து விட்டார். 

இன்றைய அரசியல் போதைக்காரர்களுக்கு நமது தண்ணீர் பிரச்சினை ஊறுகாய் ஆகிவிட்டது.

இப்போதைய நம்முடைய உடனடி தேவை , நம்முடைய தண்ணி கண்டம் போக வேண்டும்.. உங்களுக்கு தெரிந்த ஒரு நல்ல மலையாள மாந்த்ரீகர்  இருந்தார் என்றால் சொல்லுங்களேன் ..


அன்புடன் விவேக்..
While you smile , You are Beautiful.. While you Laugh, You are very Beautiful.. Atleast be beautiful.





Sunday 4 December 2011

பேர் சொல்லும் பிள்ளை

எனது மகனுக்கு (அக்ஷித்) வரும் ஜனவரி வந்தால் இரண்டு வயது பூர்த்தியாகிறது. இன்றிலிருந்து நான்கு மாதங்களுக்கு முன்னால் ஒரு நாள் , எனது அண்டை வீட்டுக்காரர் ஒருவர் அவரது மகனுக்கு பள்ளிக்கு செல்ல விண்ணப்பம் வாங்கி விட்டதாகவும் , நான் வாங்கியாகிவிட்டதா என்று விசாரித்தார். நான் அதிர்ந்து  விட்டேன். நான் அதிர்தந்தற்கான காரணங்கள் இரண்டு.

ஒன்று , என் மகனுக்கு அப்பொழுது ஒன்றரை வயதுதான் ஆகியிருந்தது. அப்பாவென்று இப்பொழுது கூப்பிடலாமா அல்லது சிறிது மாதங்களுக்கு பிறகு கூப்பிடலாமா என்று யோசித்துக்கொண்டு இருந்தான். வேறு ஒன்றுமில்லை பேச தொடங்கவில்லை. 


அக்ஷித் சுரேஷ்


இரண்டு , அண்டை வீட்டுக்காரரது மகன் என் மகனை விட இரண்டு மாதங்கள் சிறியவன். 

நான் குழப்பம் அடைந்து விட்டேன்.  அவரை ஒருவாறாக சமாளித்து அனுப்பினேன்.  நானெல்லாம் 5 வயதில் பள்ளி படிப்பை தொடங்கியவன். என் மகனை பால்குடி பாலகானாயிருக்கும்போதே பள்ளிக்கு அனுப்ப என் மனம் ஒப்பவில்லை. சரி வேறு என்ன செய்யலாமென்று யோசித்தேன். நகராட்சி அல்லது மாநகராட்சி பள்ளிகளில் தான் 5 வயதில் பள்ளியில் சேர்ப்பார்கள். அப்பள்ளிகள் ஒன்றும் மற்ற பள்ளிகளை விட சளைத்ததல்ல. இன்றைய நம் தேசத்து பழுத்த விஞ்ஞானிகள் பெரும்பாலோர் அப்பள்ளிகள் பழுத்தவர்கள்தான். 

ஆனால் இன்றைய சூழ்நிலை அப்படியல்ல. எவ்வளவுதான் பிறவி ஞானியாக இருந்தாலும் , அயல்மொழி புலமை இல்லையெனில் , ஊமையொருவர் பேச்சுப்போட்டிக்கு சென்றதுபோல்தான். 


சரி , மெட்ரிகுலேசன் பள்ளியிலேயே மகனை சேர்ப்போம் ஆனால் இப்போது வேண்டாம் இன்னும் ஒரு ஆண்டு காலம் கழித்து சேர்ப்போம் என்று முடிவெடுத்தோம்.  ஆனால் பள்ளியில் சேர்பதற்கான நடைமுறையை இப்போதோ விசாரித்து வைப்போம் என முடிவு செய்தோம். விசாரிக்க விசாரிக்க தலை கிறுகிறுத்துப்போனோம்.

பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்ப கட்டணம் , அனுமதி கட்டணம் ,  சிறப்பு கட்டணம் , மாதந்திர கட்டணம் இவையெல்லாம் சேர்த்தால் கிட்டத்தட்ட 50 ,000 ரூபாய். இது போக சீருடை , பள்ளிப்பேருந்து கட்டணம், சுற்றுலா கட்டணம் , கல்விசார் கூடுதல் கட்டணம் இவையெல்லாம் தனி. அட இதுகூட பரவயில்லை என்பது போல் விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டிய சான்றிதழ்கள் பட்டியல்தான் என்னால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. எனது மற்றும் எனது மனைவியின் கல்வி சான்றிதழ்கள் ( வீட்டில் எமது குழந்தைக்கு சொல்லிக்கொடுக்கும் தகுதி எங்களுக்கு இருக்கிறதா என்று பார்த்து கொள்வதற்கு , அப்புறம் இவ்வளோ பணம் கட்டி பள்ளியில் சேர்த்தால் , இவர்கள் சொல்லிக்கொடுக்க மாட்டார்களா ? ) அடுத்து எனது சம்பள பட்டியல் ( இவர்கள் அவ்வபொழுது சொல்லும் கட்டணங்களையும் சேர்த்து கட்டும் வசதி எனக்கு  இருக்கிறதா என்று சோதிக்க.. ஹாங் இது ரொம்ப சரி .. நியாயமாத்தான் கேக்குறாங்க.. இல்லையின்னா கோவணத்தோட ஓடி போயிட்டா .. அதையும் உருவனுமில்ல ..)

மேற்கத்திய நாட்டு மோகம் இருக்க வேண்டியதுதான்.. ஆனால் கல்வியில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து விட்டு செய்ய வேண்டாமா.. ஈ அடிச்சான் காபி எல்லா விஷயத்திலும் செய்ய வேண்டும். உதாரணமாக கொடுத்து இருக்கும் இணைப்பை சொடுக்கினால் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் இளஞ்சிறார் படிப்பிற்கான சட்ட திட்டங்களை தெரிந்துகொள்ளலாம். எல்லா சட்டதிட்டங்களையும் விடுங்கள் , பள்ளியில் சேர்வதற்கான சரியான வயதை பாருங்கள் 5 வயது முடிந்து இருக்கவேண்டும் என்று இருக்கும். 



ஆனால் எது எப்படியோ இந்த ஆண்டு என் மகனை பள்ளியில் சேர்க்க வில்லை . எமது மகன் எங்கள் பேரை சொல்ல வேண்டாம் . அவனது பெயரை சொல்லட்டும் பிறகு பள்ளியில் சேர்க்கலாம் என்று முடிவெடித்து விட்டோம் . என்னமோ தெரியவில்லை எங்கள் மகனது முகத்தில் சிரிப்பை பார்த்தது போல் இருந்ததது.


என்றும் அன்புடன்,
விவேக்,
While you smile , You are Beautiful.. 
While you Laugh, You are very Beautiful.. 
At-least be beautiful.







Friday 2 December 2011

கூடங்குளமும் சந்தேகங்களும்..

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதில் ஆயிரத்தெட்டு சிக்கல்கள்.. ஏன் எதற்கு என்று யோசிப்பதற்கு முன்னால் இணையதள புள்ளி விவரப்படி இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய 20 .இவற்றினாலெல்லாம் பிரச்சினை வந்து விடாதா?


கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தொடங்கும் முன் , அவசரகால நடவடிக்கைக்கான செயல்முறை விளக்கம் நடத்தப்பட்டது.. இதுவே பிரச்சினைக்கான மூலகாரணமும் ஆயிற்று.

செயல்முறை விளக்கம் நடைப்பெற்றபோது அங்கிருந்த உள்ளூர்மக்களுக்கு பயம் வந்ததில் சிறு குறையும் காண முடியாது. ஆனால் அதன் பின்பு நடைபெறும் விஷயங்களை பார்த்தால் ஐயுற தோன்றுகிறது. முதலில் அங்கிருந்த அதிகாரிகள் சமாதான படுத்தி பார்த்தார்கள், பின்பு மற்றொரு குழு அதற்கெல்லாம் பிறகு மத்திய குழு. முயற்சி பலிக்க வில்லை.


பின்னர் மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் A.P.J.அப்துல் கலாம் அய்யா அவர்கள் கூடங்குளம் வந்து சுற்றி பார்த்துவிட்டு அவருடைய கருத்தினை எடுத்து உரைத்தார். அதன் பின்னரும் கூடங்குளம் போராட்ட குழுவினர் சமாதானம் ஆகவில்லை. ஆனால் அவர்கள் கூறும் கருத்துக்களை கேட்டால் , கட்டாயம் சந்தேகம் வரும், போராட்டக்காரர்கள் மீது .  அய்யா அப்துல் கலாம் அவர்கள் அணுவியல் பொறியாளர் இல்லையாம்.  அட இதை சொல்லும் போராட்டக்காரர்களும் அணுவியல் பொறியாளர்கள் இல்லை சார். ஒருவேளை போராட்டக்காரர் ரத்தத்திலேயே அணுவியல் பொதிந்து இருக்குமோ?




அணுமின் நிலைய அதிகாரிகள் , அந்த அணுமின் நிலையத்திற்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில்தான் குடியிருக்க போகிறார்கள். யாருக்கேனும் ஆபத்து எனில் அவர்களை மீறிதான் மற்றவர்களுக்கு. அந்த அதிகாரிகள் இதை கூறியும் ஒன்றும் நடக்கவில்லை. போராட்டக்காரர்கள் ஒருபடி மேலே சென்று , அணுமின் நிலைய ரகசியங்களை அவர்களிடத்தில் கொடுக்க வேண்டுமாம்.


போராட்டக்காரர்கள் , கம்யுனிஸ்டுகளை பற்றி கருத்து கூறியதாவது , " இந்த கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷ்ய உதவியோடு கட்டப்படுவதால் தான் இவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் , ரஷ்யாவிற்கு பதில் அமேரிக்கா இருந்தால் கம்யுனிஸ்டுகள் கலகமூட்டியிருப்பார்கள் ". சரி இதே கேள்வியை திருப்பிக்கேட்போம்.

இந்த அணுமின் நிலைய கட்டுமானத்தில் ரஷ்யாவிற்கு பதில் அமேரிக்கா இருந்தால் போரட்டக்குழுவினருக்கு பாதுகாப்பு கிடைத்து விடுமா?  படிக்கும் உங்களுக்கு சந்தேகம் எழவில்லை? தூங்குபவர்களை எழுப்பி விடலாம் ஆனால் , தூங்குவதுபோல் நடிப்பவர்களை எப்படி எழுப்பலாம். அதற்காக நான் யாரையும் குற்றம் சொல்லிவிட வில்லை.

மத்திய அரசு  , போராட்டக்காரர்களின் சந்தேகங்களுக்கு விதிமுறை மீறாமல் விளக்கம் அளிக்கலாம் அல்லது போராட்டக்காரர்களின் சந்தேகங்களின் மீது சந்தேகம் கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் . பிரச்சினைக்கான முடிவு அடுத்த பிரச்சினைக்கு ஆதாரமாக இருந்து விடக்கூடாது.

" சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் " இது இந்திய அரசுக்கும் பொருந்தும்  அதேபோல் கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கும்  பொருந்தும்.

அன்புடன் ,
விவேக்.
( While you smile , You are Beautiful.. While you Laugh, You are very Beautiful.. Atleast be beautiful.)









Monday 28 November 2011

கற்றது கடுகளவு ..

 என்ன நண்பர்களே .. தலைப்பில் ஏதேனும் எழுத்து பிழை என்று நினைத்து விட்டீரோ..

சத்தியமாக இல்லை.. சந்தேகம் கொள்ள வேண்டாம்..


கற்றது கையளவு .. அது அந்த காலத்தில்..

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் .. கடுகை விட சிறியதாக ஏதேனும் சொல்ல வேண்டும்..

ஊர் பக்கம் சென்றால் .. யாரேனும் ஏதேனும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி கேட்டு வருவார்கள். நான் அந்த விண்ணப்பத்தை வாழ்க்கையில் அன்று தான் பார்த்திருப்பேன்.

அய்யா எனக்கு தெரியாது என்றால் .. என்ன தம்பி இவ்ளோ படிச்சியிருக்கீங்க.. இது கூட தெரியாதா என்பார்.. 

பரவாயில்லை.. தெரியாததை தெரியாது என்று சொல்வதில் வெட்கமில்லை..

எனது பள்ளி பாடத்திலோ அல்லது கல்லூரி பாடத்திலோ அந்த விண்ணப்பத்தை பற்றி சொல்லிக்கொடுத்திருந்தால் , எனக்கு தெரிந்து இருக்கும்..

சரி , நான் என்னதான் சொல்ல வருகிறேன் என்று கேட்கிறீர்களா .. விஷயத்துக்கு வருகிறேன்..

ஊழல் இல்லா நாடு.. 

ஆஹா சொல்வதற்கும், கேட்பதற்கும் எவ்வளவு நன்றாக இருக்கிறது..
ஆனால் நாம் அதற்கு என்ன செய்வோம். அதிபட்சமாக காலை செய்தித்தாளைப் புரட்டி ஊழல் பற்றிய செய்திகளை படிப்போம். ஊழலுக்கு எதிரான நம் பங்களிப்பு அவ்வளவுதான்.

சற்று அதிகப்படியான பங்களிப்பா...பிடி அன்னா ஹசரேக்கான ஆதரவை..  பாபா ராம்தேவ் மகாராஜிற்கு  ஆதரவை.. முகபுத்தகத்தில் அவர்களை பற்றி இரண்டு வரி சேர்.. ஊழலை ஒழித்தாயிற்று .. அடுத்தது சாம்பாருக்கு வெங்காயம் அரிய வேண்டும்..  

கோவம் வரலாம் .. ஆனால் உண்மை அதுதான்.. அதுவும் எனக்கும் சேர்த்துதான்..

அன்னா ஹசாரே 


                                                                     பாபா ராம்தேவ் 


இவர்கள் உண்ணா விரதம் இருந்தார்கள். நாடு முழுவதும் அவர்களுக்கு ஆதரவு பெருகிற்று..  நோக்கம் நிறைவேறியதா .. ஆனால் உண்ணாவிரதம் முடிவுற்றது.. நானும் கருப்பு சட்டை அணிந்து ஆதரவு தெரிவித்தேன்.. அதன் பிறகு அந்த சட்டையை காக்கா தூக்கி போய் விட்டது அல்லது காக்காவுக்கு தூக்கி போட்டுவிட்டேன்.. 

 ஊடகங்கள் அவர்களுக்கு தேவைக்கு அதிகமான விளம்பரங்களை ஈட்டி கொடுத்துவிட்டன. உண்ணாவிரதம் முடிந்த பிறகு தான் தெரிந்தது அதற்கான செலவுகள் கோடிகளில்.. 

செலவு செய்தது .. கார்பொரேட் நிறுவனங்கள்.. 

மத்திய அரசுக்கு எதிரான இவர்களது  போராட்டங்கள் மூலம் ,  கார்பொரேட் நிறுவனங்கள் ஏதேனும் ஆதாயம் அடைந்தார்களா.. எனக்கு கல்லூரியில் சொல்லி தரப்படவில்லை.

இரோம் சானு சர்மிளா... இவரை பற்றி ஏதேனும்  தெரியுமா ..

இவர் 2000 ஆம் ஆண்டு நவம்பர் முதல் உண்ணா விரதம் இருக்கிறார். கிட்டத்தட்ட 11  வருடங்கள்.. 

                                                              இரோம் சானு சர்மிளா

எதற்காக , ஆயுதப்படை சிறப்பு சட்டம் 1958 ஐ திரும்ப பெறக்கோரி..  அந்த சட்ட நீக்கத்தின் மூலம் அவர் தனிப்பட்ட ஆதாயம் அடைய போவதில்லை.. வேண்டுமானால் ஒரு ஆதாயம் அவரது அன்னை அடையலாம்.. கடந்த 11  வருடங்களாக பட்டினி கிடந்த அவரது மகள் சர்மிளா உணவு உண்ணலாம், இழந்து போன அவரது வாழ்க்கை திரும்ப கிடைக்குமா.. ஒருவேளை இந்த போராட்டத்தின் மூலம் இந்திய அரசாங்கத்தினை மிரட்ட முடிந்தால் நமது கார்பொரேட் நிறுவனங்களும் அவர்களது ஆதரவு ஊடகங்களும் , இவரது போராட்டத்திற்கு இந்திய மக்களிடம் ஆதரவு திரட்டி கொடுத்திருப்பார்களோ..
இதுவும் எனக்கு எங்கும் சொல்லி தரப்படவில்லை..

நம்மால் நாட்டுக்காக அல்லது நாட்டு மக்களுக்காக உண்ணாவிரதம் இருக்க முடிவதில்லை.. நம்முடைய ஆதரவையாவது சரியான நபருக்கு கொடுக்கலாமல்லவா ..

அது சரி , சரியான நபர் யார் என்று எங்கே சொல்லிக்கொடுப்பார்கள்.?


அன்புடன் ,
விவேக்,





Saturday 26 November 2011

சோதனை மேல் சோதனை ...

சென்ற வாரத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து வந்து கொண்டிருந்தபோது பயங்கரமான் டிராபிக் ஜாம் .. அந்த இடத்தில டிராபிக் ஜாம் ஆகுவதற்கு வாய்ப்பே கிடையாது.. 

அப்போது என்னுடன் பயணித்த சக ஊழியர் சொன்னார் , அனேகமாக அங்கு டிராபிக் போலீஸ் சோதனை இருக்குமென்று . அது எப்படி சொல்லுறீங்கன்னு கேட்டதற்கு  அவர் சொன்ன பதில் .. தேதி 20  க்கு மேல ஆகிடிச்சியில்ல..



எங்கள் வாகனம் மெதுவாக ஊர்ந்து சென்றது.. நண்பர் சொன்னது சரிதான் . அங்கு டிராபிக் போலீஸ் சோதனை செய்து  கொண்டு இருந்தார்கள்.. அதுவும் இரு சக்கர வாகன ஓட்டிகள்  மட்டும்.. 

                                            



இதேபோல் ஒரு நாள் , நானும் என் மனைவியும் எனது யமஹாவில் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தோம் , சற்று தொலைவில் போலீசார் எனக்கு முன்னே தனியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தார்கள்..

சரி , நம்மையும் சோதனை செய்வார்கள் என்று மெதுவாக சென்றேன்.. ஆனால் எங்களை நிறுத்த சொல்லவில்லை.. பிறகுதான் தெரிந்தது தனியாக செல்லும் அல்லது இருவருமே ஆடவராக இருக்கும் பட்சத்தில் மட்டும் சோதனை செய்கிறார்கள் என்று..

என் மனைவி என்னிடம் கேட்டார்.. என்னங்க நம்மளை ஏன் சோதனை பண்ணவில்லைஎன்று..  

அதற்கான என்னுடைய பதில் : நான் ஏற்கனவே சோதனையுடன் தான் வந்துகொண்டிருக்கிறேன் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கும்..

பிறகென்ன எனக்கு வீட்டில் சோதனை மேல் சோதனை தான் ..

என் மனதில் இருக்கும் மூன்று  கேள்விகள்.
 

1 . இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டும் தான் தவறு செய்வார்களா?
2 . அதுவும் மாத கடைசியில் மட்டும்தான் செய்வார்களா?
3 . குடும்பத்துடன் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறே செய்ய மாட்டார்களா ?


பதில் தெரிந்தவர்கள் சொல்லவும்..


அன்புடன் விவேக்.

Thursday 10 November 2011

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம் .


இன்று நான் புதிதாய் தெரிந்து கொண்ட ப்ளாக் உலகிற்குள் நுழைகிறேன்.

என் மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிபடுத்தும் உலகமாக இது இருக்கும் என நம்புகிறேன். 

இந்த வார இறுதி நாட்களில் என் எண்ணங்களை கோர்வையாக கோர்க்கிறேன்..


என்றும் அன்புடன் ,

விவேக். ( அக்சித் அப்பா )