அதிகாலைப்பொழுது அழகாய் விடிந்தது.. அழகாய் விடிந்த ஒவ்வொரு நாளும் அழகாகவே இருந்து விட்டால்.. நினைக்கும்போதே இதழ்களில் புன்னகை அரும்பியது தமிழுக்கு..
தமிழ்ச் செல்வன் .. சுருக்கமாக தமிழ்.... 30 ஐ நெருங்கிவிட்டதொரு சராசரி மென்பொருள் வல்லுநர் .அவனுக்கு ஒவ்வொரு நாளும் அழகாய்த்தான் இருக்கும். அவனைப்பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் அவனுக்கான வரம்தான்.. தூக்கம் தெளிந்தும் தெளியாத காலைக்கருக்கலில் கண்களுக்குள் புகை மூட்டமாய் ஒரு தேவதை.
எடுப்பான நாசி , மான் போல் மருண்ட விழிகள் ஆனால் நெஞ்சை துளைக்கும் பார்வை , மோனோலிசப் புன்னகைக்கு போட்டியான புன்னகை.. இப்படிபட்ட பெண்ணை நேரில் பாரத்தரியாதபோது அவள் கண்டிப்பாக தேவதையாகத்தானே இருக்கும்... அன்றும் வழக்கம் போல தேவதையின் தரிசனத்தோடுதான் தமிழுக்கு விடிந்தது..
அடுத்தது அவனுக்கான அன்றைய பிரச்சினை .. அவனது திருமணம்..
அப்படியானால் பிரச்சினைக்காரர்கள் .. வேறு யாராக இருக்க முடியும் .. அவனின் பெற்றோர்களே..தினம்தோறும் அவர்களுக்கு தமிழின் திருமணத்தை பற்றி தமிழிடம் பேசுவதுதான் முக்கியமான வேலை..
ஆனால் அவர்கள் வேண்டுகோள் தமிழின் காதுவரை மட்டுமே எட்டியது.. ஏனெனில் அவனுக்கு கனவில் வரும் தேவதையே மனைவியாக வரவேண்டும் அல்லது தேவதையின் சாயலில் இருப்பவளாக இருக்க வேண்டும். ஆனால் பெற்றவர்கள் அவர்களுக்கு மிகவும் வேண்டபட்டவர்களது பெண்ணென்று ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டி திருமணம் செய்துகொள்ள சொல்லி வற்புறுத்தி கொண்டு இருக்கிறார்கள். அதிதி .. அந்த பெண்ணின் பெயர் ..அந்த பெண்ணின் புகைப்படத்தை தமிழும் பார்த்திருக்கிறான். பெண் ஒன்றும் அவலட்சணம் இல்லை , ஆனால் அவன் மனம் திருமணக்கண்ணோட்டத்திலையே பார்க்கவில்லை. கடந்த ஒரு மாத காலமாக அவனது அம்மாவிற்கு வேலையே தமிழிடம் அதிதி பற்றி பேசுவதுதான்.
வழக்கம் போல் அன்றும் காலை உணவருந்தும்போது தம்பதி சகிதமாக அவனிடம் பேச்செடுத்தனர்.வழக்கம் போல் தமிழும் அவனது பெற்றோரின் பேச்சினை உதாசீனப்படுத்திவிட்டு அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றான் ..
அலுவலகத்தில் வழக்கமான வணக்கங்களை பறக்கவிட்டுவிட்டு தனது இருக்கையை அடைந்தான். தனது கணினியை கவனிக்க தொடங்கினான்.. ஆனால் மனம் ஏனோ கனவில் வந்த தேவதையையே சுற்றிக்கொண்டிருந்தது. அப்பொழுது அடுத்த இருக்கையில் இருக்கும் அனிதா யாரிடமோ கோபமாக பேசிக்கொண்டிருந்தது கேட்டது. இருக்கையை திருப்பி அனிதாவை பார்த்த மாதிரி அமர்ந்தான். அலைபேசியில் மிளகாய் பறக்க விட்டுக்கொண்டிருந்தாள். பேசி முடியட்டுமென்று அமைதியாக காத்துகொண்டிருந்தான்.
அலையடித்து ஓய்ந்தது போல் இருந்தது அவள் பேசிமுடித்ததும். பின்னர் கண்களை மூடியபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தாள். மெதுவாக தமிழ் அவளிடம் பேச்சு கொடுத்தான்.
அனிதா .. என்ன ஆச்சு.. யாரிடம் இவ்வளவு கோபம்..?
அனிதா .. தமிழை வெறுமையாகப் பார்த்துவிட்டு கூறினாள்..
தமிழ் , அண்ணன் கல்யாணத்திற்கு பொண்ணு பார்த்துகிட்டு இருக்காங்க.. ஆனால் ஒவ்வொரு பொண்ணையும் அவன் பாத்துட்டு வேண்டாம்னு சொல்லுற காரணங்கள் ஒவ்வொன்னும் ஒத்துக்க முடியாத அளவுக்கு இருக்கு.. ஆனா எங்க அம்மா நேரடியா அவன்கிட்ட பேசாம என்னையே பேச சொல்லிக்கிட்டு இருக்காங்க .. வீட்டுல அவன் முன்னாடி பேசுறதுக்கு பயந்துகிட்டு என்னை அலைபேசியில் கூப்பிட்டு என்கிட்டே திட்டு வாங்கிட்டு இருக்காங்க.
தமிழுக்கு இதை கேட்டதும் அவனை பற்றியே அனிதா பேசுவதுபோல் இருந்தது. சுவாரஸ்யமானான்..
அனிதா , உங்க அண்ணனுக்கு பொண்ணு பிடிக்கலன்னா , பிடிச்ச பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதுதானே..
இல்லை தமிழ் , பிரச்சினை என்ன தெரியுமா.. இவன் பொண்ணு பாக்குறது எப்படின்னா சந்தையில ஆடு மாடு பாக்குரமாதிரி நினைச்சிகிட்டான்.. அவளும் ஒரு சக மனுஷிதான் அவளுக்கும் ஆசைகள் இருக்கும்னு புரிஞ்சுக்கவே இல்லை.
அவனுடைய முதல் நிபந்தனை பொண்ணு அழகா இருக்கணும் , அமைதியான பொண்ணா இருக்கணும், இப்படி ஆயிரத்தெட்டு நிபந்தனைகள். உலகத்திலேயே அழகான பொண்ணுக்குதான் கல்யாணம் ஆகணுமின்னா , ஐஸ்வர்யா ராய் க்கு மட்டும்தான் கல்யாணம் ஆகிருக்கணும். மத்தவங்களுக்கு எப்படி கல்யாணம் ஆச்சு..
அட அப்படியே இவன் எதிர்பாக்குற மாதிரி பொண்ணு கிடைச்சிட்டாலும் , அந்த பொண்ணு இவனை வேண்டாம்னு சொல்லிட்டா.. இவன் என்ன பண்ணுவான்?
தமிழிற்கு தலைக்குள் சுரீர் என்று இருந்தது.. அனிதா அவள் மன பாரத்தை இவனிடம் இறக்கி வைத்துவிட்டு தன வேலையை கவனிக்க தொடங்கினாள்..
தமிழ் யோசிக்க தொடங்கினான்.. எப்பொழுது அலுவலகத்திலிருந்து கிளம்பினான் எப்பொழுது வீட்டை அடைந்தானென்று அவனுக்கே தெரிவில்லை.. தூங்கியும் போனான்..
விடியதொடங்கியது ..கனவும் வந்தது.. ஆனால் அதில் எந்தவொரு தேவதையும் வரவில்லை...
அலுவலகத்திற்கு புறப்பட ஆயுத்தமானான்.. ஆனால் அவன் பெற்றோர் அவனிடம் எதுவுமே பேசவில்லை. அவனாகவே பேச்சை எடுத்தான்..
அம்மா , நான் அந்த பெண் அதிதியை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றான் . அவன் பெற்றோருக்கு சந்தோஷத்தில் ஒன்றும் புரியவில்லை. ஆனால் அதே சமயம் அவன் மன மாற்றத்திற்கான காரணமும் தெரியவில்லை..
தேவதைகள் மண்ணிற்கு வந்து விட்டால் அவர்கள் தேவதைகள் இல்லை.. தேவதைகள் தேவதைகளாகவே இருந்துவிடட்டும் என்று தமிழ் மனதிற்குள் நினைத்துக்கொண்டான்..
இனி அதிதி ஒருத்திதான் அவனைப்பொறுத்தவரை தேவதை..
அன்புடன் ,
விவேக்,
No comments:
Post a Comment