Wednesday, 4 January 2012

அணைக்கட்டு 1986

குல்லூர்சந்தை .. எனது தாயார் பிறந்த ஊர்..

தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு உரிய அனைத்து அடையாளங்களையும் தன்னகத்தே கொண்டது. நூற்றுக்கணக்கான குடும்பங்கள்.. அனைத்து சமுதாய மக்களும் குடியிருக்கும் ஒரு கிராமம் அது..

அந்த ஊரில் ஒரு பள்ளிக்கூடம்.. ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் உள்ள பள்ளி அது. அந்த பள்ளியை தொடங்கியவர்கள் .. பள்ளியை தொடங்கிய போது செல்வந்தர்களாக இருந்தவர்கள் .இப்போது அவர்களது சந்ததியினர் அவ்வளவாக சொல்லிகொள்ளும் நிலைமையில் இல்லை. பள்ளியும் சொல்லிகொள்ளும் நிலைமையில் இல்லை. அவரவர் தங்கள் குடும்பத்தை கவனிக்கவே சரியாக இருக்கிறது. இப்பள்ளிக்கு கூடிய சீக்கிரம் ஒரு நல்ல நிலைமை வரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதை தவிர வேறு வழி ஒன்றும் இல்லை எமக்கு..





ஆனால் அதே ஊரில் உள்ள அரசு கவனிக்க வேண்டிய அரசு பொறுப்பில் உள்ள ஒரு அரசுடைமைக்குமா நாம் ஆண்டவனை வேண்டுவது?


1979 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் அடிக்கல் நாட்டப்பட்டது இந்த ஊரில் உள்ள குல்லூர்சந்தை நீர்த்தேக்கம். 1986 ல் அதே எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது இந்த நீர்த்தேக்கம்.



பழைய ராமநாதபுர மாவட்டமான விருதுநகர் மாவட்டம் வைப்பாறு என்ற ஆற்றுக்கான நீர்பிடிப்பு பகுதியில் ஒன்று. அந்த வைப்பாறுக்கான கிளை ஆறு கெளசிக மகாநதி. இந்த கெளசிக மகாநதி இந்த குல்லூர்சந்தையின் வழியாகத்தான் வைப்பாறை அடைகிறது. இந்த ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டதுதான் இந்த நீர்த்தேக்கம். நீர்த்தேக்கம் தொடங்கிய காலத்தில் அது நன்றாகவே இருந்தது. ஆனால் இப்போது ஏன் இருக்கிறது என்று இருக்கிறது. 


அன்றும் இன்றும்

அணை கட்டிய புதிதில் ஆற்று நீர் மட்டுமே சேர்ந்த இந்த அணைக்கட்டில் , விருதுநகரின் கழிவு நீரும் சேர தொடங்கியது. இன்று கழிவு நீர் மட்டுமே சேர்ந்து வருகிறது. அணைக்கட்டு திறப்பு விழாவில் பேசிய அன்றைய முதல்வர் குல்லூர்சந்தை என்ற பெயர் நெல்லூர்சந்தை என்று ஆகிவிடும் என்று கூறினார். ஆனால் இன்றைய நிலைமை .. இந்த அணை அதை நம்பி இருப்பவர்களை "கொல்லும் சந்தை" ஆகிவிடுமோ என்று அச்சப்பட தோன்றுகிறது.

வேறு எந்த மாநிலத்தையும் சாராமல் இருப்பதால்தான் இந்த மாதிரியான சிறு அணைக்கட்டுகளுக்கு இந்த மரியாதை போலும். இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசை பட்டாற்போல்.. இருக்கும் சிறு சிறு அணைக்கட்டுகளை எல்லாம் அம்போ என்று விட்டுவிட்டு பெரிய அணைக்கட்டுகளுக்கு அயலாரை தொங்கி கொண்டு இருக்கிறோம். அந்த பெரிய அணைக்கட்டுகள் எல்லாம் நம் மாநிலத்திற்கு மிக மிக முக்கியமானதுதான்.. இல்லை என்று சொல்லவில்லை.. ஆனால் இந்த சிறிய அணைக்கட்டுகள் முக்கியம் இல்லை என்ற எண்ணம் வந்து விட கூடாது. அரசு இயந்திரம் சற்று கண் விழித்து இதனை அழிவில் இருந்து காப்பாற்றினால் அவர்களுக்கு கோடி புண்ணியம் உண்டு.

பி.கு: இந்த அணைக்கட்டு தமிழ்நாடு சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு தலம்.


என்றும் அன்புடன்,
விவேக்,

you smile , You are Beautiful..
While you Laugh, You are very Beautiful..
Atleast be beautiful.

No comments:

Post a Comment