Saturday, 21 January 2012

தேவதை


அதிகாலைப்பொழுது அழகாய் விடிந்தது..  அழகாய் விடிந்த ஒவ்வொரு நாளும் அழகாகவே இருந்து விட்டால்.. நினைக்கும்போதே இதழ்களில் புன்னகை அரும்பியது தமிழுக்கு.. 

தமிழ்ச் செல்வன் .. சுருக்கமாக தமிழ்....  30 ஐ நெருங்கிவிட்டதொரு சராசரி  மென்பொருள் வல்லுநர் .அவனுக்கு ஒவ்வொரு நாளும் அழகாய்த்தான் இருக்கும். அவனைப்பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் அவனுக்கான வரம்தான்.. தூக்கம் தெளிந்தும் தெளியாத காலைக்கருக்கலில் கண்களுக்குள் புகை மூட்டமாய் ஒரு தேவதை.



எடுப்பான நாசி , மான் போல் மருண்ட விழிகள் ஆனால் நெஞ்சை துளைக்கும் பார்வை , மோனோலிசப் புன்னகைக்கு போட்டியான புன்னகை..  இப்படிபட்ட பெண்ணை நேரில் பாரத்தரியாதபோது அவள் கண்டிப்பாக தேவதையாகத்தானே இருக்கும்...  அன்றும் வழக்கம் போல தேவதையின் தரிசனத்தோடுதான் தமிழுக்கு விடிந்தது.. 

அடுத்தது அவனுக்கான அன்றைய  பிரச்சினை .. அவனது திருமணம்.. 
அப்படியானால் பிரச்சினைக்காரர்கள்  .. வேறு யாராக இருக்க முடியும் .. அவனின் பெற்றோர்களே..தினம்தோறும் அவர்களுக்கு தமிழின் திருமணத்தை பற்றி தமிழிடம் பேசுவதுதான் முக்கியமான வேலை..  

ஆனால் அவர்கள் வேண்டுகோள் தமிழின் காதுவரை மட்டுமே எட்டியது.. ஏனெனில் அவனுக்கு கனவில் வரும் தேவதையே மனைவியாக வரவேண்டும் அல்லது தேவதையின் சாயலில் இருப்பவளாக இருக்க வேண்டும். ஆனால் பெற்றவர்கள் அவர்களுக்கு மிகவும் வேண்டபட்டவர்களது பெண்ணென்று ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டி திருமணம் செய்துகொள்ள சொல்லி வற்புறுத்தி கொண்டு இருக்கிறார்கள். அதிதி .. அந்த பெண்ணின் பெயர் ..அந்த பெண்ணின் புகைப்படத்தை தமிழும் பார்த்திருக்கிறான். பெண் ஒன்றும் அவலட்சணம் இல்லை , ஆனால் அவன் மனம் திருமணக்கண்ணோட்டத்திலையே பார்க்கவில்லை. கடந்த ஒரு மாத காலமாக அவனது அம்மாவிற்கு வேலையே தமிழிடம் அதிதி பற்றி பேசுவதுதான்.

 வழக்கம் போல் அன்றும் காலை உணவருந்தும்போது தம்பதி சகிதமாக அவனிடம் பேச்செடுத்தனர்.வழக்கம் போல் தமிழும் அவனது பெற்றோரின் பேச்சினை உதாசீனப்படுத்திவிட்டு அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றான் .. 

அலுவலகத்தில் வழக்கமான வணக்கங்களை பறக்கவிட்டுவிட்டு தனது இருக்கையை அடைந்தான். தனது கணினியை கவனிக்க தொடங்கினான்.. ஆனால் மனம் ஏனோ கனவில் வந்த தேவதையையே சுற்றிக்கொண்டிருந்தது. அப்பொழுது அடுத்த இருக்கையில் இருக்கும் அனிதா யாரிடமோ கோபமாக பேசிக்கொண்டிருந்தது கேட்டது. இருக்கையை திருப்பி அனிதாவை பார்த்த மாதிரி அமர்ந்தான். அலைபேசியில் மிளகாய் பறக்க விட்டுக்கொண்டிருந்தாள். பேசி முடியட்டுமென்று அமைதியாக காத்துகொண்டிருந்தான்.

 அலையடித்து ஓய்ந்தது போல் இருந்தது அவள் பேசிமுடித்ததும். பின்னர் கண்களை மூடியபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தாள். மெதுவாக தமிழ் அவளிடம் பேச்சு கொடுத்தான். 

அனிதா .. என்ன ஆச்சு.. யாரிடம் இவ்வளவு கோபம்..? 

அனிதா .. தமிழை வெறுமையாகப் பார்த்துவிட்டு கூறினாள்..

தமிழ் , அண்ணன் கல்யாணத்திற்கு பொண்ணு பார்த்துகிட்டு இருக்காங்க.. ஆனால்  ஒவ்வொரு பொண்ணையும் அவன் பாத்துட்டு வேண்டாம்னு சொல்லுற காரணங்கள் ஒவ்வொன்னும் ஒத்துக்க முடியாத அளவுக்கு இருக்கு.. ஆனா எங்க  அம்மா நேரடியா அவன்கிட்ட பேசாம என்னையே பேச சொல்லிக்கிட்டு இருக்காங்க .. வீட்டுல அவன் முன்னாடி பேசுறதுக்கு பயந்துகிட்டு என்னை அலைபேசியில் கூப்பிட்டு என்கிட்டே திட்டு வாங்கிட்டு இருக்காங்க.

தமிழுக்கு இதை கேட்டதும் அவனை பற்றியே அனிதா பேசுவதுபோல் இருந்தது. சுவாரஸ்யமானான்..

அனிதா , உங்க அண்ணனுக்கு பொண்ணு பிடிக்கலன்னா , பிடிச்ச பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதுதானே..

இல்லை தமிழ் , பிரச்சினை என்ன தெரியுமா.. இவன் பொண்ணு பாக்குறது எப்படின்னா சந்தையில ஆடு மாடு பாக்குரமாதிரி நினைச்சிகிட்டான்.. அவளும் ஒரு சக மனுஷிதான் அவளுக்கும் ஆசைகள் இருக்கும்னு புரிஞ்சுக்கவே இல்லை.

அவனுடைய முதல் நிபந்தனை பொண்ணு அழகா இருக்கணும் ,  அமைதியான பொண்ணா  இருக்கணும், இப்படி ஆயிரத்தெட்டு நிபந்தனைகள். உலகத்திலேயே அழகான பொண்ணுக்குதான் கல்யாணம் ஆகணுமின்னா , ஐஸ்வர்யா ராய் க்கு மட்டும்தான் கல்யாணம் ஆகிருக்கணும். மத்தவங்களுக்கு எப்படி கல்யாணம் ஆச்சு..

அட அப்படியே இவன் எதிர்பாக்குற மாதிரி பொண்ணு கிடைச்சிட்டாலும் , அந்த பொண்ணு இவனை வேண்டாம்னு சொல்லிட்டா.. இவன் என்ன பண்ணுவான்?

தமிழிற்கு தலைக்குள் சுரீர் என்று இருந்தது.. அனிதா அவள் மன பாரத்தை இவனிடம் இறக்கி வைத்துவிட்டு தன வேலையை கவனிக்க தொடங்கினாள்..

தமிழ் யோசிக்க தொடங்கினான்.. எப்பொழுது அலுவலகத்திலிருந்து கிளம்பினான்  எப்பொழுது வீட்டை அடைந்தானென்று அவனுக்கே தெரிவில்லை.. தூங்கியும் போனான்..

விடியதொடங்கியது ..கனவும் வந்தது.. ஆனால் அதில் எந்தவொரு தேவதையும் வரவில்லை...

அலுவலகத்திற்கு புறப்பட ஆயுத்தமானான்.. ஆனால் அவன் பெற்றோர் அவனிடம் எதுவுமே பேசவில்லை. அவனாகவே பேச்சை எடுத்தான்.. 

அம்மா , நான் அந்த பெண் அதிதியை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றான் . அவன் பெற்றோருக்கு சந்தோஷத்தில் ஒன்றும் புரியவில்லை. ஆனால் அதே சமயம் அவன் மன மாற்றத்திற்கான காரணமும் தெரியவில்லை..

தேவதைகள் மண்ணிற்கு வந்து விட்டால் அவர்கள் தேவதைகள் இல்லை.. தேவதைகள் தேவதைகளாகவே இருந்துவிடட்டும் என்று தமிழ் மனதிற்குள் நினைத்துக்கொண்டான்..

இனி அதிதி ஒருத்திதான் அவனைப்பொறுத்தவரை தேவதை..



அன்புடன் ,
விவேக்,

Monday, 16 January 2012

தூக்கம் நம் கண்களை ..

ஜானகி அம்மாவின் குரலில் ஆலயமணி படத்தின் தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...என்ற பாடல் ஒலித்தது..  ஆனால் தூக்கம்தான் வருவதாய் இல்லை..

சின்ன வயதில் விளையாடிய நேரம் எவ்வளவு தூங்கும் நேரம் எவ்வளவு என்று தெரியாத அளவிற்கு இருக்கும் விளையாட்டும் தூக்கமும்..

ஆனால் இன்று தூங்கபோகும் நேரம் கூட மற்ற நேரத்தினை பற்றிய யோசனை..
இதன் காரணமாக மறு நாள் அலுவலக நேரத்தில் கொட்டாவி மேல் கொட்டாவி.. அட நிம்மதியாக கொட்டாவி விட முடிகிறதா.. நாகரீகம் கருதி அரைகுறையாகத்தான் கொட்டாவி விடமுடியும்.. தும்மலுக்கும் இதுதான் கதி..
சிலர் உச்ச பட்சமாக தும்மும்போது சிறிதுக்கூட சத்தம் வராமல் தும்முவார்கள் பாருங்கள்.. என்று அவர்கள் காது ஜவ்வு கிழியுமோ .. அன்று முதலாவது அவர்கள்  திருந்துவார்கள் என்று நம்புகிறேன்.. ஆனால் சிறு குழந்தைகளோ புற உலக நாகரீகம் ஏதும் அறியாமல் இருப்பது எவ்வளவு அருமை பாருங்கள்..




சிறு குழந்தைகள் சந்தோசமாக விளயாடுவதைப் பார்க்கும்போது சற்று பொறாமையாக இருக்கும். ஒருமுறை இதே மாதிரியான ஒரு சூழ்நிலையில் எனக்கு நாம் குழந்தையாகவே இருந்திருக்க கூடாதா என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. அதை எனது தாயாரிடம் கூட பகிர்ந்து கொண்டேன். ஆனால் அவரது விளக்கம் என்னை சற்றே யோசிக்க வைத்தது. எவர் எவர் எந்த வயதினராயிருந்தாலும் அந்த அந்த வயதிற்கேற்ற பிரச்சினைகள் அவர்களுக்கு இருக்கும்.. ஒன்றாம் வகுப்பு பிள்ளைக்கு வீட்டுப்பாடம் எழுதுவதிலிருந்து பக்கத்து இருக்கை பையன் கிள்ளுவது வரை பிரச்சினை இருக்கும். இந்த வாதில் நமக்கு அது பிரச்சினையாக தெரியாது .. ஆனால் ஒன்றாம் வகுப்பு பிள்ளைக்கு அதைவிட பெரிய பிரச்சினை இருக்காது. அதே போல் நமக்கு இப்போது இருக்கும் பிரச்சினை சிறிது காலம் சென்ற பிறகு காலாவதியாயிருக்கும். இந்த பதில் என்னை மலைக்க வைத்தது .. மறுக்க முடியவில்லை..


நாம் பெரியவர்களாக வளரும்போது ஏட்டு படிப்பினை படிக்கிறோம்..  நாகரீக போர்வையினை போர்த்திக்கொள்கிறோம்..  கொட்டாவியை மட்டுமல்ல நமது எண்ணங்களையும் வாய் விட்டு கூற முடியாத நிலையில் உள்ளோம்..  தலைக்குள் நம் எண்ணங்களை போட்டு பூட்டிகொள்ளாமல் குழந்தைகள் போல் கபடமின்றி இருந்தால் தூக்கம் நம் கண்களை தானாகவே தழுவும்.



While you smile , You are Beautiful.. While you Laugh, You are very Beautiful.. Atleast be beautiful.

Wednesday, 4 January 2012

அணைக்கட்டு 1986

குல்லூர்சந்தை .. எனது தாயார் பிறந்த ஊர்..

தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு உரிய அனைத்து அடையாளங்களையும் தன்னகத்தே கொண்டது. நூற்றுக்கணக்கான குடும்பங்கள்.. அனைத்து சமுதாய மக்களும் குடியிருக்கும் ஒரு கிராமம் அது..

அந்த ஊரில் ஒரு பள்ளிக்கூடம்.. ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் உள்ள பள்ளி அது. அந்த பள்ளியை தொடங்கியவர்கள் .. பள்ளியை தொடங்கிய போது செல்வந்தர்களாக இருந்தவர்கள் .இப்போது அவர்களது சந்ததியினர் அவ்வளவாக சொல்லிகொள்ளும் நிலைமையில் இல்லை. பள்ளியும் சொல்லிகொள்ளும் நிலைமையில் இல்லை. அவரவர் தங்கள் குடும்பத்தை கவனிக்கவே சரியாக இருக்கிறது. இப்பள்ளிக்கு கூடிய சீக்கிரம் ஒரு நல்ல நிலைமை வரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதை தவிர வேறு வழி ஒன்றும் இல்லை எமக்கு..





ஆனால் அதே ஊரில் உள்ள அரசு கவனிக்க வேண்டிய அரசு பொறுப்பில் உள்ள ஒரு அரசுடைமைக்குமா நாம் ஆண்டவனை வேண்டுவது?


1979 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் அடிக்கல் நாட்டப்பட்டது இந்த ஊரில் உள்ள குல்லூர்சந்தை நீர்த்தேக்கம். 1986 ல் அதே எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது இந்த நீர்த்தேக்கம்.



பழைய ராமநாதபுர மாவட்டமான விருதுநகர் மாவட்டம் வைப்பாறு என்ற ஆற்றுக்கான நீர்பிடிப்பு பகுதியில் ஒன்று. அந்த வைப்பாறுக்கான கிளை ஆறு கெளசிக மகாநதி. இந்த கெளசிக மகாநதி இந்த குல்லூர்சந்தையின் வழியாகத்தான் வைப்பாறை அடைகிறது. இந்த ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டதுதான் இந்த நீர்த்தேக்கம். நீர்த்தேக்கம் தொடங்கிய காலத்தில் அது நன்றாகவே இருந்தது. ஆனால் இப்போது ஏன் இருக்கிறது என்று இருக்கிறது. 


அன்றும் இன்றும்

அணை கட்டிய புதிதில் ஆற்று நீர் மட்டுமே சேர்ந்த இந்த அணைக்கட்டில் , விருதுநகரின் கழிவு நீரும் சேர தொடங்கியது. இன்று கழிவு நீர் மட்டுமே சேர்ந்து வருகிறது. அணைக்கட்டு திறப்பு விழாவில் பேசிய அன்றைய முதல்வர் குல்லூர்சந்தை என்ற பெயர் நெல்லூர்சந்தை என்று ஆகிவிடும் என்று கூறினார். ஆனால் இன்றைய நிலைமை .. இந்த அணை அதை நம்பி இருப்பவர்களை "கொல்லும் சந்தை" ஆகிவிடுமோ என்று அச்சப்பட தோன்றுகிறது.

வேறு எந்த மாநிலத்தையும் சாராமல் இருப்பதால்தான் இந்த மாதிரியான சிறு அணைக்கட்டுகளுக்கு இந்த மரியாதை போலும். இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசை பட்டாற்போல்.. இருக்கும் சிறு சிறு அணைக்கட்டுகளை எல்லாம் அம்போ என்று விட்டுவிட்டு பெரிய அணைக்கட்டுகளுக்கு அயலாரை தொங்கி கொண்டு இருக்கிறோம். அந்த பெரிய அணைக்கட்டுகள் எல்லாம் நம் மாநிலத்திற்கு மிக மிக முக்கியமானதுதான்.. இல்லை என்று சொல்லவில்லை.. ஆனால் இந்த சிறிய அணைக்கட்டுகள் முக்கியம் இல்லை என்ற எண்ணம் வந்து விட கூடாது. அரசு இயந்திரம் சற்று கண் விழித்து இதனை அழிவில் இருந்து காப்பாற்றினால் அவர்களுக்கு கோடி புண்ணியம் உண்டு.

பி.கு: இந்த அணைக்கட்டு தமிழ்நாடு சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு தலம்.


என்றும் அன்புடன்,
விவேக்,

you smile , You are Beautiful..
While you Laugh, You are very Beautiful..
Atleast be beautiful.